Tuesday, 27 May 2025

 ஸ்ரீ வைத்தியநாதாஷ்டகம் தமிழ் மொழிபெயர்ப்பு


வணங்குவர், ராம லக்ஷ்மண, ஜடாயு

வேதம் போற்றும் உன்னை

வணங்குவர், ஷண்முகன், சூரியன், செவ்வாய்

தயாமூர்த்தி நீலகண்டன் உன்னை;

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்.


சிரசில் கங்கையும் பிறையும் தரித்தவனே

முக்கண்ணனே, காமனையும் காலனையும் எரித்தவனே

தேவர்களால் போற்றப்படுபவனே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


பக்தர்களின் அன்பனே திரிபுரம் அழித்தவனே

பினாகமெனும் வில்லேந்தி தீயோரை அழிப்பவனே

மானுடர் வாழ்வில் லீலைகள் புரிபவனே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


வாதம் முதலான நோய்களை அழிப்பவனே

மாமுனிகளால் வணங்கப்படுபவனே

சூரியன் சந்திரன் அக்னியை கண்களாய் நினைப்பவனே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


ஊமை, செவிடு, குருடரை பேச,கேட்க, பார்க்க வைப்பவனே

ஊனமுற்றோரை நடக்க வைப்பவனே

தீரா நோய் குஷ்டத்தையும் தீர்ப்பவனே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்



அகிலத்தில் வியாபித்திருக்கும் உன்னை

அறியமுடியும் வேதாந்தத்தால்

மாமுனிகள் வணங்குவர் உன் தாமரை பாதங்களை

மும்மூர்த்தி ரூபன் உனக்கு ஆயிரம் நாமங்கள்

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


தீயவைதரும் இன்னல் தகர்ப்பாய்

துக்கமும் பயமும் தொலைப்பாய் குளத்தில் நீராடி கோயிலில் திருநீறு அணிவோர்க்கு;

மனித உடலில் இருக்கும் ஆத்மாவின் ஸ்வரூபமே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


கொடியில் ரிஷபம் கொண்ட நீலகண்டனே

மலர்கள் சந்தனம் திருநீரால் ஜொலிப்பவனே

நன் மனைவியும் மக்களும் அளிப்பவனே

வைத்தியநாதனுக்கு,  சிவனுக்கு நமஸ்காரம்


பாலாம்பிகையுடன் உறை வைத்தியநாதனை போற்றி

இப்பாடலை மும்முறை ஜபிப்போர்க்கு

நோய்கள் நீங்கி ஜனன மரண பயம் விலகும்.

 I have been chanting Adithya Hrudayam Sloka by sage Agasthya.  I tried to translate it in to Tamil. 


களத்திலே களைப்புற்றவன் கவலை கொண்டான்

களம் இறங்கிய ராவணனைக் கண்டே----1


தேவர்களோடு தொடர் யுத்தம் காண வந்த

தெய்வப்புலவர் அகத்தியர் கூறினார் ராமனிடம்---2


திண்தோள் ராமா தெரிந்துகொள் ரகசியத்தை

இதனால் யுத்தத்தில் எதிரிகளை வெல்வாய் நீ---3


புனிதம்நிறை ஆதித்யஹ்ருதயம் களையும் எதிரிகளை

தினம் துதித்தால் தந்திடும் வெற்றியும் அழியாப்புகழும்---4


பாவம் போக்கிடும் பல்வகை நலனருளும்

துயரம் தொலைத்து கவலை களைந்து ஆயுள் கூட்டிவிடும்---5


உதிக்கின்றான் கதிரவன் அனைவர்க்கும், மதிக்கின்றார் தேவரும் அசுரரும்

தன்னொளியால் ப்ரகாசிக்கும் பகலவனே ப்ரபஞ்ச நாயகன்---6


தேவகாந்தியும் தகிக்கும் சக்தியும் தன்னுள் அடக்கி

தேவாசுர லோகங்களை காக்கின்றான் தன்னொளியால்---7


ப்ரஹ்மா, விஷ்ணு, சிவ, ஸ்கந்த, ப்ரஜாபதியும் அவனே

இந்திர, குபேர, கால, யம, சோம, வருணனும் அவனே---8


வசு, ஸாத்ய, அஸ்வினி,  மருத்துகள், மனுவின் மூதாதையரும் அவனே

வாயுவாய், அக்னியாய், உள்ளிருக்கும் ப்ராணனாய், பருவகால படைப்பாளியாய் ப்ரகாசிப்பவன் அவனே---9


கிரணங்களால் உயிர் கொடுத்துக்காக்கும் கிரகம் அதிதி புத்திரன் ஆதித்யன்

பொன்விதை எழு பொற்கதிர் தரும் ஒளி நிறை பகலவன்---10 


பல்லாயிரம் ஒளிக்கற்றைகள் பொன் நிற குதிரைகளாய் வெளியேறி ஒளிபடைத்து

பக்குவமாய் ஈரிருள் நீக்கி, மகிழ்ச்சிதந்து ஒளிப்பறவையாய் வானில் மின்னும்---11


ஸ்வர்ணகர்பன் பனித்துளி கரைத்து, பகலவனாய் வானில் மிளிர்கிறான்

அதிதி புத்திரன் அக்னிகர்பன் சங்கூதி துயிலெழுப்பி சோம்பலைக் களைகிறான்---12


ரிக் யஜுர் சாம வேதமறிந்தவன், ஈரிருள் நீக்கவல்ல வான அரசன்

அடர்மழையும் அவனால், நீர் நண்பனவன் குதித்துக்கடப்பான் விந்தியமலையை---13


செம்பழுப்பு நெருப்புக் கோளம், நெருங்கியன எரிக்க வல்ல மரணத்தின் மாற்றுருவம்

செங்கதிரின் செம்மைகொண்டு பாரோர்க்கு சீர்மை நல்கும் கவி---14


பாரோரை வசப்படுத்தும் பகலவனே விண்மீன்-கிரகங்களுள் முதன்மையானவன்

பன்னிரு ஆத்மாவும்  ஒளியாற்றலும்  பெற்ற உனை துதிக்கின்றேன்—15


வணங்குகிறேன், கிழக்கில் உதித்து மேற்கில் மறைபவனை

வணங்குகிறேன், ஒளி கிரக தலைவனை, பகலவனை---16


வெற்றியும் மங்களமும் அருளி, உலகைக் காக்கும் செங்கதிரவனே நமஸ்காரம்

கதிர்கள் ஆயிரம் பரப்பும் அதிதி மகன் ஆதித்யனே நமஸ்காரம்---17


வணங்குகிறேன், பலமும் வீரமும் நிறைந்தவனை, வண்ணமயதேகம் கொண்டவனை,

வணங்குகிறேன், தாமரையை துயிலெழுப்பும் மார்த்தண்டனை---18


ப்ரஹ்மா விஷ்ணு சிவனின் தலைவனே, உயர்சக்தியோடு ஒளிரும் ஆதித்யனே

ருத்ரரூபத்தில் ஒளிர்ந்து, ஆட்கொள்பவனே உன்னை வணங்குகிறேன்-19


அறியாமையை அழித்து, அசையாதன அசைத்து, எதிரிகளை தொலைத்து

நன்றியற்றோரை நீக்கி, நல்லொளி பரப்பும் நாயகனை வணங்குகிறேன்---20


உருக்கிய தங்கமாய் ஒளிர்பவனே, உலகை இயக்க அனல் அளிப்பவனே

இருள் விலக்குபவனே, ஒளி நிறைந்தவனே, உலக சாட்சியாய் இருப்பவனே உனக்கு நமஸ்காரம்---21


வணங்குகிறேன், அழிக்கவும் ஆக்கவும் வல்ல தெய்வத்தை

வணங்குகிறேன், கதிர்களால் நீருறிஞ்சி ஆவியாக்கி மழைபொழிபவனை---22



நித்திரையில் இருப்போருள் நிலைத்து விழித்திருப்பவனுக்கும்,

அக்னிஹோத்திரத்தின் நற்பலனாய் திகழ்பவனுக்கும் நமஸ்காரங்கள்—23


வேதங்களும் அவனே; யாகங்களும் அவனே; யாக பலன்களும் அவனே.

நடப்பவற்றை நடத்தும் அகில நாயகனும் ரவியே---24


ராகவனே ! பேரிடரில், வனத்தில், பயத்தில் பஜிப்பவனை 

மூழ்கிவிடாமல் கரைத்தேற்றுவான் பகலவன்--25


தேவதலைவனை, அகில நாயகனை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கி

மும்முறை இதனை ஜபித்து யுத்தத்தில் வெற்றி காண்பாய்---26


வலிமை மிகு கைகளை உடையவனே, தக்க தருணத்தில் வென்றிடுவாய் ராவணனை

என்றே கூறி வந்தவழி திரும்பினார் அகஸ்திய முனி---27


பக்தனான ராகவன் பெருமைமிகு ஸ்லோகத்தைக் கேட்டு

களைந்தான் கவலைகளை, காட்சிதந்தான் மகிழ்ச்சியாக---28


சூரியனைப் பார்த்து, ஜபித்து சந்தோஷமடைந்தான்

மும்முறை அர்க்யம் அளித்து தூய்மையாகி, வில்லைக் கையில் எடுத்தான் வீரன்---29


குதூகலமாய் இருந்தவன், யுத்த களத்தில் ராவணன் நெருங்குவதைக் கண்டு

பலத்தை திரட்டி  வலிமைமிகு ராக்ஷசனை அழிக்கத் தயாரானான்---30


இரவில் திரியும் அரக்க அரசனுக்கு அழிவு நெருங்கிவிட்டதை அறிந்து

மகிழ்ச்சியோடு ரவி, ராகவனைப் பார்த்து கடவுளர் நடுவில் நின்று “தாமதிக்காதே” என்றான்---31